கோவை:சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப் போவதாக கூறி, கோவை மாநகராட்சியால், பல கோடி ரூபாய் செலவிடப்பட்ட இடம், தற்போது, கட்டட கழிவு கொட்டுமிடமாக, மாறி வருகிறது. அதை பார்த்து, ஹாக்கி வீரர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.கோவையில், 1,000க்கும் மேற்பட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். இவர்கள் பயிற்சி பெற, அரசு தரப்பில், மைதான வசதி செய்து தர கோரிக்கை விடப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முயற்சித்தபோது, போதிய இடம் கிடைக்காமல், அத்திட்டம் வேறு மாவட்டத்துக்கு சென்றது.இதையறிந்த, மாநகராட்சி நிர்வாகம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள் இடம் ஒதுக்கி, சர்வதேச தரத்துக்கு, மைதானம் அமைத்து தருவதாக, 2013ல் உறுதியளித்தது. முதலில், ரூ.2.25 கோடியில், 92 மீட்டர் நீளம், 53 மீட்டர் அகலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.பின், ரூ.4.5 கோடியாக மதிப்பீடு மாறியது; 2016-ல் மீண்டும் பணி துவங்கியது. தளம் அமைப்பதற்கான, 'டர்ப்', வெளிநாட்டில் இருந்து தருவிக்க தாமதமானதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.ஷ்ரவன்குமார் கமிஷனராக இருந்தபோது, மைதானத்துக்கு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டது; மொத்தம் ரூ.4.5 கோடி செலவானதாக, கணக்கெழுதப்பட்டு உள்ளது.பின், பார்வையாளர்கள் மாடம்; வீரர்கள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப் போவதாக கூறி, 'ஸ்மார்ட் சிட்டி' நிதியை செலவழிக்க முடிவு செய்து, ரூ.24 கோடிக்கு திட்ட மதிப்பீடு மாற்றப்பட்டது.இதில், ரூ.4.5 கோடி செலவழித்தது போக, இதர பணிகளுக்கு ரூ.19.5 கோடி ஒதுக்கப்பட்டது; 'ஸ்மார்ட் சிட்டி' இயக்குனரவையிலும், ஒப்புதல் பெறப்பட்டது. ஒரு மைதானம் அமைக்க, இவ்வளவு நிதி செலவழிக்க வேண்டுமா என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு, 'டுபிட்கோ', அத்திட்டத்தை திருப்பி அனுப்பியது.அதனால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக, செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என, அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, ஷ்ரவன்குமார் வேறு துறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.தற்போது, ஹாக்கி மைதானம் திட்டத்துக்கு உயிர் கொடுக்க, எந்த அதிகாரியும் முயற்சிக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதனால், கட்டட கழிவு கொட்டுமிடமாக மாறி இருக்கிறது.ரூ.4.5 கோடி செலவழித்த இடமா, இது, என ஆதங்கப்படும் அளவுக்கு, அப்பகுதி மிகவும் மோசமாக இருக்கிறது. இவ்வளவு கோடி செலவழித்தும், இன்னும் மைதானம் அமையவில்லையே என்கிற ஏக்கத்தில், ஹாக்கி வீரர்கள் உள்ளனர்.'செக் செய்கிறேன்'ஹாக்கி மைதானத்தின் தற்போதைய நிலையின் அவலம் குறித்து, தற்போதைய, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, ''ஹாக்கி மைதானம் தொடர்பாக, 'செக்' செய்து, சொல்கிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE