கோட்டா:ராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் சிறுமியர் உட்பட 38 பேரை அருகில் உள்ள மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மணி நேரங்களில் அவர்கள் மீட்கப்பட்டனர்.
ராஜஸ்தானின் ஜல்வார் மாவட்டத்தில் அண்டை மாநிலமான மத்திய பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பழங்குடியினர் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். ம.பி.யின் எல்லை பகுதியான கலாசியா கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடக்கிறது. இதற்கு பழங்குடியினர் தான் காரணம் என கிராமவாசிகள் நினைத்து வந்தனர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல்போனது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் ஒரு பஸ் கார் உள்ளிட்ட வாகனங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர்.ஆண்கள் வேலை தேடிச் சென்றதால் அங்கிருந்த 10 பெண்கள் 20 சிறுமியர் மற்றும் எட்டு குழந்தைகளை பஸ்ஸில் கடத்திச் சென்றனர்.தகவல் அறிந்த ராஜஸ்தான் போலீசார் மத்திய பிரதேச போலீசார் உதவியுடன் அவர்களை சில மணி நேரங்களில் மீட்டனர். ஒரே நேரத்தில் பல பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE