கோவை;குனியமுத்துார் செங்குளத்தில் தேக்கப்பட்ட தண்ணீரில் கசிவு ஏற்பட்டு, அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்குள் நேற்று புகுந்தது.கோவை, குனியமுத்துார் செங்குளத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கும்போது, அருகாமையில் உள்ள தோட்டங்களில் நீர் ஊற்றெடுக்கிறது.இக்குளத்தில் இருந்து செல்லும் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. ஒரு மாதத்துக்கு முன், மழை பெய்தபோது, இப்பிரச்னை ஏற்பட்டது; மின் மோட்டார் வைத்து, தண்ணீர் உறிஞ்சி வெளியேற்ற முயன்றனர். அவ்வாறு முடியாததால், அப்பகுதியில் வசித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, ஹீரா கார்டன், எஸ்.என்.ஆர்., கார்டன், வசந்தம் நகர், பிருந்தாவன் நகர் போன்ற பகுதிகளுக்குள், மீண்டும் தண்ணீர் புகுந்தது.பொதுமக்கள் திரண்டதால், மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்தனர். மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, செங்குளத்தில் நீர் தேக்குவதை குறைக்க வேண்டுமென, பொதுப்பணித்துறைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, செங்குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடுவது நேற்று நிறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE