திருப்பூர்;எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, 'சீசன் டிக்கெட்' வழங்க வேண்டுமென, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.தொழில் நகரங்களாக உள்ள கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு இடையே தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். மூன்று மாவட்டம் இடையே ரயிலில் மட்டும் தினமும், சராசரியாக, 15 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
இவர்களில், 6,000 பேர் சீசன் டிக்கெட் பெற்றவர்கள். ஈரோடு - பாலக்காடு, சேலம்- கோவை, பாலக்காடு டவுன் - திருச்சி, ஈரோடு - கோவை, கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரயில்களை நம்பி இவர்கள் பயணித்து வந்தனர்.சமீபத்தில் ரயில்வே, பாசஞ்சர் ரயில்கள் பலவற்றை எக்ஸ்பிரசாக மாற்றியது.இதையடுத்து, பாலக்காடு டவுன் - திருச்சி, கோவை - நாகர்கோவில் ரயில்கள் குறிப்பிட்ட சில ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்கின்றன.மாதந்தோறும் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் மட்டும் செலுத்தி, சீசன் டிக்கெட் பெற்று ஆயிரக்கணக்கானோர் பாசஞ்சரில் பயணித்து வந்தனர். தற்போது, பாசஞ்சர், எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டுள்ளதால், சீசன் டிக்கெட் மூலம் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15 ரூபாயாக இருந்த வழக்கமான கட்டணம், முன்பதிவால், 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சீசன் பாஸ் பயணிகள் கூறியதாவது:டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார், புறப்படும், சென்று சேரும் முகவரி கேட்கின்றனர். சீசன் பாஸ் பெறும் போதும் இந்த விவரங்களையே கேட்கின்றனர். தற்போது, 200 ரூபாய் செலுத்தினால், நான்கு நாட்களுக்கு டிக்கெட் வழங்குகின்றனர்.மாதத்துக்கு முழு தொகையும் செலுத்த தயாராக இருந்த போதும், சீசன் பாஸ் வழங்குவதில்லை. இதனால், நான்கு நாட்களுக்கு ஒருமுறை திருப்பூர், கோவையில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு அலைய வேண்டியுள்ளது. பணம் செலுத்துவோருக்கு, சீசன் பாஸ் வழங்குவதுடன், எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE