திருப்பூர்;திருப்பூர் நகரப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், டி.எம்.எப்., மருத்துவமனை அருகே, ரயில்வே சுரங்கபாலம் அமைக்கப்பட்டது.பாலத்துக்குள் தேங்கும் மழைநீரை அகற்ற, மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைக்கப்பட்டது. பாலத்திற்குள் வடியும் மழைநீர், தொட்டியில் சேகரமாகி, மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது.நெடுஞ்சாலைத்துைறயின், நபார்டு மற்றும் கிராமசாலைகள் திட்ட பிரிவு ஊழியர்கள், முறையாக பராமரிக்காத காரணத்தால், சிறிய மழை பெய்தாலும், பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, குளம் போல் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதையறிந்த தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு சரவணன், மாநகராட்சி உதவி கமிஷனர் சுப்பிரமணியம் ஆகியோர், தண்ணீர் தேங்கும் பிரச்னையை விளக்கினர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:பாலத்தில் சேகரமாகும் தண்ணீர், நேரடியாக தொட்டிக்கு சென்றுவிட வேண்டும். மாறாக, குப்பை அடைப்பால் தண்ணீர் செல்லவில்லை. தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கும் மோட்டார்களும் பழுதாகியுள்ளன. 15 எச்.பி., மற்றும் இரண்டு 10 எச்.பி.,மோட்டார் செயலற்று உள்ளது.சேற்றுடன் வரும் கழிவுநீரை எடுக்கும் திறனுள்ள மோட்டார் அங்கு இல்லாததே இப்பிரச்னைக்கு காரணம் என விளக்கப்பட்டது. பாலத்தின் பக்கவாட்டில் கசியும் தண்ணீர் தரைக்கு வராமல், தொட்டிக்கு செல்லும் வகையில், 'பேபி வாய்க்கால்' அமைக்க வேண்டும்.விரைவில் மோட்டாரை தயார்செய்து, தண்ணீரை வெளியேற்ற வேண்டும். குப்பை அடைப்பு ஏற்படாத வகையில், இரும்பு வலை பொருத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், குறைபாடுகளை சரிசெய்து , பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE