பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில் அறுவடைத்திருவிழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுவதுடன், இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிப்பு பணியும் நடக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள பூங்காக்களில், காய்கறி சாகுபடி திட்டத்தை நகராட்சி செயல்படுத்தி வருகிறது. அதில், ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில், கடந்த அக்., மாதம் ஒரு ஏக்கர் பரப்பில், தக்காளி, கத்தரி, கீரை வகைகள், நிலக்கடலை, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் போன்ற பணிகள் மேற்கொண்டு, பயிர்களை நல்ல முறையில் வளர்க்க துாய்மை பணியாளர்கள் கவனம் செலுத்தினர். காய்கறிகள், நிலக்கடலை உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதையடுத்து, நட்சத்திர பூங்காவில் அறுவடை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் ராம்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.நிலக்கடலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்யும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அறுவடை செய்யப்பட்ட பயிர்கள், பூங்காவில் உள்ள விநாயகர் சன்னதியில் வைத்து பூஜைகள் நடந்தன. அதன்பின், மக்களுக்கு வழங்கப்பட்டன.சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:நட்சத்திர பூங்காவில், சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள், நிலக்கடலை, சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டன. மொத்தம், அரை டன் எடையுள்ள காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு, மக்கள், துாய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது.மக்கள் வீடுகளில் உருவாகும் மக்கும், மக்காத கழிவுகளை பிரித்து வழங்க வேண்டும். இதுபோன்று இயற்கை காய்கறி தோட்டங்களை வீட்டு வளாகத்தில் அமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE