உடுமலை;தொடர் மழையால், விளைநிலங்களில், அதிக தண்ணீர் தேங்கி, சின்னவெங்காயம் உட்பட சாகுபடிகளில், அதிக சேதம் ஏற்பட்டு, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும், பல்வேறு காய்கறி சாகுபடிகள், பல ஆயிரம் ஏக்கரில், மேற்கொள்ளப்படுகிறது.வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, அதிக தண்ணீர் தேவை, சாகுபடி செலவு பிடிக்கும், சின்னவெங்காயத்துக்கு நாற்று நடவு செய்தனர். வழக்கமாக, ஜன., மாதத்தில், மழைப்பொழிவு குறைந்து, பனிப்பொழிவு மட்டுமே கூடுதலாக இருக்கும். எனவே, பொங்கல் பண்டிகையையொட்டி, அறுவடை செய்யும் வகையில், காய்கறி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அவ்வகையில், ஏக்கருக்கு, சின்னவெங்காயம் சாகுபடிக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு, அறுவடை பணிகளை துவக்க விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக, பெய்த சாரல் மழையோடு, நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழை, அனைத்து சாகுபடிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, சின்னவெங்காய விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, அதிக ஈரப்பதம் காரணமாக, அறுவடைக்கு தயாரான வெங்காயம் முற்றிலுமாக அழுகியுள்ளது. இதே போல், தக்காளி, கத்தரி உட்பட சாகுபடிகளில், பூக்கள் உதிர்ந்து, மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.சின்னப்பன்புதுார் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குப்புசாமி, செல்வராஜ் கூறியதாவது: மார்கழி மாதத்தில், எதிர்பாராமல் பெய்த மழையால், சாகுபடி முழுவதும் பாதித்துள்ளது. சில நாட்களில், அறுவடை செய்ய தயாராக இருந்த வெங்காயம் அழுகியுள்ளதால், பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பலத்த காற்றினால், பந்தல் காய்கறி சாகுபடிக்காக அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் கொடி அடியோடு சாய்ந்துள்ளது. இவற்றை சீரமைக்கவும், அதிக செலவு பிடிக்கும். தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து, பாதிப்புக்கு, அரசு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE