உடுமலை;ரயில்வே சுரங்கப்பாலங்களில், மழை நீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்படும் பிரச்னைக்கு, உள்ளாட்சி அமைப்புகள், ரயில்வே துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளின் போது, உடுமலை பகுதியில், மழை நீர் ஓடைகளில், ரயில்வே சுரங்கப்பாலங்கள் அமைக்கப்பட்டது.பல்வேறு குடியிருப்புகளுக்கு, செல்லும் முக்கிய பகுதிகளில், அமைக்கப்பட்ட இந்த பாலங்களில், கனரக வாகனங்கள் தவிர்த்து, அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இத்தகைய பாலங்களில், மழை நீர் வெளியேறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. உடுமலை நகரில், பழநியாண்டவர் நகர், தளி ரோடு மேம்பாலம் அருகிலும், நகரை ஒட்டி, எஸ்.வி., புரம் உட்பட பல்வேறு இடங்களிலும் இத்தகைய பாலங்கள் உள்ளன.வடகிழக்கு பருவ மழையால், இந்த பாலங்களில், மழைநீர் பல வாரங்களாக, தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சமீபத்தில், பாலப்பம்பட்டி அருகே, தண்ணீர் தேங்கி நின்ற, சுரங்கப்பாலத்தில், வழியாக செல்ல முயன்ற கார், தண்ணீரில் மூழ்கியது.இதே போல், தற்போது நகரப்பகுதியிலுள்ள சுரங்கப்பாலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, அதிக போக்குவரத்து உள்ள தளி ரோடு மேம்பாலம் அருகிலுள்ள, பாலத்திலும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.நீண்ட காலமாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், ரயில்வே துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE