காரமடை அருகே, பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கரில் குளம் உள்ளது. மருதுார் அருகே உள்ள கட்டாஞ்சி மலை, திம்மம்பாளையம், காரமடை பகுதிகளில் பெய்யும் மழைநீர், இந்த குளத்திற்கு வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, சிறுமுகை வரை உள்ள, ஏழு எருமை பள்ளத்தில் வரும் தண்ணீரின் ஒரு பகுதியும், இந்த குளத்துக்கு வரும் வகையில், வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, காரமடை வட்டாரத்தில் கனமழை பெய்தது. ஏழு எருமை பள்ளத்தில் பெருகிய வெள்ளத்தால் பெள்ளாதி குளம் நிரம்பியது. இந்த குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறி, பெள்ளாதி, ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், சிறுமுகை பேரூராட்சி வழியாக, பவானி ஆற்றில் கலக்கிறது.ஆனால், பெள்ளாதி குளத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மூங்கில் குட்டை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
ஊராட்சியில், ஒரு பக்கம் குளம், தடுப்பணைகள் நிரம்பி வழியும் நிலையில், மற்றொரு பக்கம் தண்ணீர் இல்லாமல், மூங்கில் குட்டை வறண்டு காணப்படுகிறது.நிரம்பி வழியும் பெள்ளாதி குளத்திலிருந்து, குழாய் வாயிலாக மூங்கில் குட்டைக்கு, தண்ணீர் கொண்டு செல்ல, அனுமதி வழங்க வேண்டும் என, பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன், அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
ஊராட்சி தலைவர் கூறியதாவது:பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையத்தில், 18 ஏக்கரில் மூங்கில் குட்டை உள்ளது. சராசரியாக, 20 அடி ஆழம் கொண்டது இந்த குட்டை. ஊராட்சியில் ஏழு எருமை பள்ளத்தில் கட்டியுள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், மூங்கில் குட்டை மட்டும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
பெள்ளாதி குளத்தில் இருந்து குழாய் வாயிலாக, மூங்கில் குட்டையில் தண்ணீரை நிரப்பினால், சுற்றுப் பகுதியில் உள்ள, 5 கிராமங்களில், 50க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும்; விவசாயமும் செழிக்கும்.எனவே பெள்ளாதி குளத்தில் இருந்து, மூங்கில் குட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, உள்ளாட்சித் துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு ஊராட்சி தலைவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE