கோவை:கோவையில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியில் இருந்து நேற்று அதிகாலை, 5:30 மணி வரை மழை பெய்தது; ஜன., மாதத்தில், இதுவரை இல்லாத அளவாக, 112.8 மி.மீ., மழை பதிவானது.கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு துவங்கிய மழை, இடி, மின்னலுடன் அதிகாலை, 5:30 மணி வரை நீடித்தது. காற்று வீசாமல், நிதானமாக, அதேநேரம் கன மழையாக பெய்தது. நீர் வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், தண்ணீர் ரோட்டில் வழிந்தோடியது.நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 110 கனஅடி, நீர் வழங்கு வாய்க்காலில், 90 கனஅடி தண்ணீர் செல்கிறது. குனியமுத்துார் வாயக்காலில், 80 கனஅடி, உக்கடம் பெரிய குளத்துக்கான வாய்க்காலில், 30 கனஅடி தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:ஜன., மாதம் பெய்வதை, வழக்கமாக, குளிர்கால மழை என்பர். இது, வடகிழக்கு பருவ மழையின் தொடர்ச்சியே. மேற்கு பசிபிக் கடல் மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்தினால், மழை காணப்படுகிறது. வரும், 12 வரை மழை தொடரும்.கடந்த, 2019, ஆக., 8ம் தேதி, கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, 106 மி.மீ., மழை பதிவானது. 2017, செப்., தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் மழை பெய்தபோது, 250 மி.மீ., பதிவானது. ஜன., மாதத்தில் இதுநாள் வரை பெய்யாத அளவாக, 135 மி.மீ., பெய்துள்ளது; நேற்று முன்தினம் இரவு மட்டும், 112.8 மி.மீ., பதிவாகியுள்ளது. இது, மழைப்பொழிவில் புதிய வரலாற்று பதிவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.மழையளவுநேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் பெய்த மழையளவு:பீளமேடு விமான நிலையம் - 112.8 மி.மீ.,வேளாண் பல்கலை - 70 மி.மீ.,கோவை தெற்கு - 92 மி.மீ.,சூலுார் - 37 மி.மீ.,பெ.நா.பாளையம் - 82 மி.மீ.,அன்னுார் - 12 மி.மீ.,மேட்டுப்பாளையம் - 23.1 மி.மீ.,பொள்ளாச்சி - 36 மி.மீ.,ஆழியார் - 11 மி.மீ.,சோலையார் - 17 மி.மீ.,வால்பாறை பி.ஏ.பி., - 20 மி.மீ.,வால்பாறை தாலுகா - 18 மி.மீ.,சின்னக்கல்லார் - 42 மி.மீ.,சின்கோனா - 15 மி.மீ.,நிரம்பும் குளங்கள்உக்குளம், கிருஷ்ணாம்பதி, செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளங்கள் நிரம்பியுள்ளன. நரசம்பதி, கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் சுண்டக்காமுத்துார் குளம், குனியமுத்துார் செங்குளத்தில், 90 சதவீதமும், புதுக்குளம், கோளராம்பதி, குனியமுத்துார் சின்ன குளத்தில், 80 சதவீதமும் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.கனமழையில் 34 வீடுகள் சேதம்கோவையில் கனமழை காரணமாக, 34 வீடுகள் சேதமடைந்தன. கோவை வடக்கு பகுதியில், 17 வீடுகள், கோவை தெற்கில் 9, சூலுாரில் 6, பேரூரில் 2 என, 34 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷ்னர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE