கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்ட புதியமகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டட பணிகள் முடிந்ததையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இயங்கிய நிலையில், புதிய மாவட்டம் உதயமான பின்பு, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.இதனால், தற்போது பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய சிகிச்சை பிரிவுகள் அவ்வப்போது துவக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப புதிய கட்டடங்களும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் பலர், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு சென்றாலும், உயர் சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கு மாதந்தோறும் 250 முதல் 300 பிரசவங்கள் வரை நடக்கிறது.இதனால், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் போதிய இடவசதியின்மையால் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் பலர் அவதிக்குள்ளாகி வந்தனர். தற்போது, மருத்துவமனைக்கு எதிரே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் கூடுதலாக மகப்பேறு பிரிவு இயங்கி வருகிறது.மருத்துவமனையில் மகப்பேறு பிரிவினை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, புதிய மகப்பேறு மற்றும் குழந்தை நல பிரிவு கட்டத்திற்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்தாண்டு பணிகள் துவங்கியது.ஐந்து மாடி கொண்டு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. மகப்பேறு பிரிவுகள் ஏற்கனவே கடும் இட நெருக்கடியில் உள்ளது. எனவே புதிய கட்டடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE