புதுச்சேரி; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி, அரசாணை வெளியிட வேண்டும் என தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் அட்டவணை இன பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் ஏற்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதே போல், தனியார் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் முழு கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நீட்டிக்க உள்ளோம் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.இதற்காக தி.மு.க.,சார்பில் அரசுக்கு நன்றி தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளோம். ஏனென்றால் தேர்தல் காலத்திலும், சட்டசபை, அரசு விழாக்கள், பொது இடங்களில் பல அறிவிப்புகளை இந்த அரசு வெளியிட்டுள்ளது. அதில் 1 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இதுவும், மற்றவை போன்று அறிவிப்போடு நிற்காமல், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி, உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே தி.மு.க., நன்றி தெரிவிக்கும்.எனவே, அறிவிப்போடு இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையை முதல்வர் நாராயணசாமி எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE