ஊத்துக்கோட்டை; ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வாகன போக்குவரத்திற்கு போடப்பட்ட தற்காலிக தரைப்பால சாலையில் உடைப்பு ஏற்பட்டது.ஆரணி ஆற்றில், பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கம், சமீபத்தில், 'நிவர், புரெவி' புயல்களால், பெய்த மழையால் நிரம்பியது. நீர்வரத்து அதிகரித்ததால், உபரி நீர் வினாடிக்கு, 11,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், கடந்த, நவ., 25ம் தேதி, ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றில் போடப்பட்ட, தற்காலிக தரைப்பால சாலை, இரண்டு இடங்களில் உடைந்தது. போக்குவரத்து பாதித்ததால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர்.அதிகாரிகளை கண்டித்து கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, ஊத்துக்கோட்டை அனைத்து வணிகர் சங்கத்தினர் தெரிவித்ததால், உடனடியாக இரு தினங்களில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.இரு தினங்களுக்கு முன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழை மற்றும் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு, 300 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் ஆகியவற்றால், மீண்டும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நேற்று காலை, நீர்வரத்து அதிகரித்து தரைப்பால சாலை மூழ்கியது. இதில் சாலை, இரண்டு இடங்களில் அறுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் செல்ல தற்காலிக இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு அதில் ஏறி, இறங்கிச் செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE