செங்கல்பட்டு; தனியார் நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை விடுவிக்க, லஞ்சம் வாங்கிய வழக்கில், போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.சென்னை, தனியார் நிறுவனம் சார்பில், சென்னை வளசரவாக்கம் பகுதியில், 2016- - 18ம் ஆண்டில், மழை நீர் கால்வாய் துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.இவர், 2018, நவ., 19ல், மழை நீர் கால்வாயிலிருந்த அடைப்புகளை சரி செய்யும் பணியை, அந்நிறுவனத்தைச் சேர்ந்த தங்கதுரை, 35, என்பவர் கண்காணித்து வந்தார்.அப்போது, அங்கு வந்த வளசரவாக்கம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், 52, கால்வாய் பணி செய்யவிடாமல் தடுத்து, தங்கதுரையின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார். பின், வாகனத்தை விடுவிக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.இதை கொடுக்க விரும்பாத தங்கதுரை, சென்னை, ஆலந்துார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார்.பின், நவ., 30ம் தேதி, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், தங்கதுரையிடம், 8,000 ரூபாய், இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியபோது, கைது செய்யப்பட்டார்.இது சம்பந்தமான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கே.ரஜினி முன் நடந்து வந்தது.இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இன்ஸ்பெக்டர் அய்யப்பனுக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.அதை கட்டத் தவறினால், ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ஏ.கே.கே.ரஜினி, நேற்று, உத்தரவிட்டார். அரசு தரப்பில், கூடுதல் அரசு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE