''பணி ஓய்வுக்கு பின், அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. சமூக பணியாற்றவும், ஊழலுக்கு எதிராக பணியாற்றவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்,'' என, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தெரிவித்தார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:
திடீரென விருப்ப ஓய்வு பெற, என்ன காரணம்?
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில், இரண்டு ரகம் உண்டு. சம்பாதிக்க நினைப்பவர்கள் முதல் ரகம்; மக்களுக்கு சேவையாற்ற நினைப்பவர்கள், இரண்டாவது ரகம். நான் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன்.கடந்த, ஏழு ஆண்டுகளாக, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புள்ள பதவி எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, பதவியில் நீடித்தது போதும் என நினைத்து, விருப்ப ஓய்வுக்கு மனு செய்தேன்.
விருப்ப ஓய்வில் செல்வதற்கு முன்பாக, உங்கள் நிலை குறித்து, அரசுக்கு எதுவும் தெரிவிக்கவில்லையா?
தலைமைச் செயலருக்கு, செப்., 29ல் ஏழு பக்க கடிதம் அனுப்பினேன். அதில், தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பதவி, உதவி இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, கவனிக்க வேண்டியது. இங்கு அதிக பணி இல்லை. இதில் தேவையில்லாமல், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளீர்கள். ஏழு ஆண்டுகளாக இதில் பணியாற்றி வருகிறேன் என்ற விபரத்தை தெரிவித்திருந்தேன். ஆனால், தலைமைச் செயலரிடமிருந்து, எந்த பதிலும் வரவில்லை.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, நீங்கள் கடைசியாக செய்த பணி என்ன?
தமிழகத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற புதிய துறையை ஏற்படுத்த வேண்டும்.மத்திய அரசின் ஐ.ஐ.டி., நிறுவனங்களைப் போல், மாநில அரசு சார்பில், தரமான கல்வி நிறுவனங்களை துவக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளேன்.
விருப்ப ஓய்வு கொடுத்த பின், பதவியில் தொடர விரும்பினீர்களா?
தவறான தகவல். கடந்த ஆண்டு, காந்தியடிகள் பிறந்த தினமான, அக்., 2ல் விருப்ப ஓய்வில் செல்ல, அனுமதி கோரி கடிதம் அளித்தேன். அந்த கடிதத்தில், டிச., 30 அல்லது ஜன., 30ல் பணியிலிருந்து விடுவிக்கும்படி கோரியிருந்தேன்.
மூன்று மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த மாதம், 28 ம் தேதி, தலைமைச் செயலரை சந்திக்க, அனுமதி கோரினேன். அனுமதி கிடைக்கவில்லை. அதனால், கடிதம் எழுதினேன். ஆனால், எவ்வித தகவலும் தெரிவிக்காமல், கடந்த, 2ம் தேதி என்னை பதவியிலிருந்து விடுவித்துள்ளனர். என்னை விடுவித்தது மகிழ்ச்சி. அதை ரகசியமாக வைத்துக் கொண்டு, கடைசி நாளில் விடுவித்ததாக தெரிவித்ததுடன், நான் விருப்ப ஓய்வில் செல்ல தயங்குவதாக, தகவலை பரப்பியது, வருத்தம் அளிக்கிறது.முன்கூட்டி தகவல் எதுவும் தெரிவிக்காமல், 30 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றிய என்னை, தவறு செய்தவனை விடுவித்ததுபோல், விடுவித்துள்ளனர். இதை தமிழக அரசும், தலைமைச் செயலரும், எனக்கு அளித்த பரிசாக கருதுகிறேன்.
உங்களின் அடுத்த திட்டம் என்ன?
எந்த திட்டமும் கிடையாது. திட்டம் வகுத்து நான் செயல்படுவதில்லை. இயற்கை வழியில் செல்பவன். மதுரை கலெக்டராக, தேர்தல் கமிஷன் நியமித்தது. சிறப்பாக பணியாற்றி, தேர்தல் கமிஷன் பாராட்டு பெற்றேன். கிரானைட் ஊழல் விவகாரத்தை வெளிப்படுத்தினேன். அனைத்தும் இயற்கையாகவே நடந்தது.

அரசியலுக்கு வரப் போவதாக கூறப்படுகிறதே?
அந்த எண்ணம் இல்லை. ஆனால், சமூகப் பணியாற்றவும், ஊழலுக்கு எதிராக பணியாற்றவும் முடிவு செய்துள்ளேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE