சென்னிமலை: காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலையில், முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் முதல்வர் பேசியதாவது: கைத்தறி நெசவாளர் சங்கத்துக்கு வழங்கும், தள்ளுபடி மானியத்தொகையை, 150 கோடி ரூபாயில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளோம். கைத்தறி நெசவாளர்களுக்கு, 10 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். சாலை, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளோம். ஆசியாவிலேயே, மிகப்பெரிய கால்நடை பூங்கா திறந்துள்ளோம். பொங்கல் பரிசு, முழு கரும்பு தருகிறோம், மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுங்கள். நல்ல மழை பெய்கிறது; நாட்டில் வறட்சி இல்லை. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
கொ.ம.தே.க., மீது சாடல்: அரச்சலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது: குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளம், கால்வாய் தூர்வாரப்பட்டு, கடைக்கோடி விவசாயிகள் பயனடையும் வகையில், விவசாயத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்கிறது. நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஓடாநிலை தீரன் சின்னமலை நினைவிடத்தில் முதல்வர் பேசியதாவது: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கடந்த லோக்சபா தேர்தலில், ஒரு சீட்டுக்காக கட்சியை அடமானம் வைத்து, கூட்டணி போட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கட்சியிலேயே கொங்கு என பெயரை வைத்து கொண்டு, கொங்கு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். ஏனென்றால், கொங்கு மக்கள் நேர்மையுடன், உழைத்து வாழ விரும்புபவர்கள். தி.மு.க., ஒரு வாரிசு அரசியல் கட்சி. இவ்வாறு முதல்வர் பேசினார்.
பிரசாரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்ரமணி, ராமலிங்கம், தென்னரசு, மொடக்குறிச்சி சேர்மன் கணபதி, துணைசேர்மன் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., செல்வக்குமார சின்னையன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, 46 புதூர் ஊராட்சி தலைவர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கலைமணி, கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் குடிநீர் திட்டம்: அரச்சலூர், நவரசம் பெண்கள் கல்லூரியில் மகளிர் குழுவினரிடமும், அவல்பூந்துறையில் வேனில் இருந்தபடி, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மகளிர் குழுவினருக்கு, 800 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., காலத்தில் கட்டப்பட்டு, பழுதடைந்த வீடுகளை சீரமைக்க, 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதிக்கான கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE