ஆத்தூர்: தம்மம்பட்டியில், விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால், 80 மி.மீ., பதிவானது. வசிஷ்ட, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரை, பரவலாக மழை பெய்தது. இரவு, 8:00 மணிக்கு மேல், நேற்று காலை, 5:00 மணி வரை, கன மழை பெய்தது. தம்மம்பட்டியில், விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால், 80 மி.மீ., மழையளவு பதிவானது. அதேபோல், கரியகோவிலில் பெய்த மழையால், 70 மி.மீ., பதிவானது. இதன்மூலம், கரியகோவில் அணைக்கு, வினாடிக்கு, 147 கன அடி தண்ணீர் வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 47 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நிரம்பிய 7 ஏரிகள்: ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் பெய்த கனமழையால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதில், தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வழியாக செல்லும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, வலசக்கல்பட்டி, தெடாவூர், ஆணையாம்பட்டி, திட்டச்சேரி ஆகிய ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது. ஆத்தூர் வழியாக செல்லும் வசிஷ்ட நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், நரசிங்கபுரம் அணைமேடு தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வசிஷ்ட நதியால், தென்னங்குடிபாளையம் புது ஏரி, அய்யனார் கோவில், கல்லாநத்தம், முட்டல் ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில், கல்லாநத்தம் ஏரி, ஒன்பது ஆண்டுக்கு பின், நேற்று நிரம்பியதால், உபரிநீர் வெளியேறும் பகுதியில், அப்பகுதி விவசாயிகள், பூக்களை தூவி வழிபட்டனர். விடிய, விடிய பெய்த மழையால், ஆறு, ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பதிவான மழை அளவு: சேலத்தில், நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: தம்மம்பட்டி - 80 மி.மீ., கரியகோவில் - 70, வீரகனூர் - 64, கெங்கவல்லி - 60, ஆத்தூர் - 66.4, ஏற்காடு - 37.6, ஆணை மடுவு - 37, பெத்தநாயக்கன்பாளையம் - 23, சேலம் - 17.4, ஓமலூர் - 17, காடையாம்பட்டி - 14, மேட்டூர் - 13.6, வாழப்பாடி - 6, இடைப்பாடி - 1.2 மி.மீ.,
ஆணையாம்பட்டி மக்கள் அவதி: கனமழையால், தம்மம்பட்டியில் இருந்து, கெங்கவல்லி வழியாக செல்லும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நடுவலூர் தடுப்பணையில் இருந்து, சுவேத நதிக்கு செல்லும் ஓடை பாதை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதனால், ஓடையில் இருந்து திரும்பிய தண்ணீர், ஆணையாம்பட்டியில், ஜீவா நகர், ஜோதி நகர் பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்தது. வீட்டில் வைத்திருந்த நெல், அரிசி உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகின. சிறு மின்மோட்டார் வைத்து, வீட்டில் இருந்த தண்ணீரை, மக்கள் வெளியேற்றினர். பின், கெங்கவல்லி வருவாய்த்துறையினர், அப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE