கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில், அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வரும் பணிகளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று, நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரியில், 700 படுக்கை வசதிகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகிறது. தரை தளம் மற்றும் ஐந்து தளங்களுடன் கல்லூரி கட்டடமும், 1,000 பேர் அமரக்கூடிய கலையரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. சிற்றுண்டியகம், சமையல் கூடம், சவக்கிடங்கு ஆகிய பகுதிகளுக்கு, இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு மருத்துவமனை கட்டடம், 6 கல்லூரி கட்டடங்கள், 12 குடியிருப்பு கட்டடங்கள் என, மொத்தம், 19 கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள், 45 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், மாணவ, மாணவியர் விடுதி, அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கான குடியிருப்பு கட்டடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவக் குழுவினருடன் அவர், ஆலோசனை நடத்தினார். கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE