சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை துவங்கியதை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‛இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை' என தெரிவித்தார்.
இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட, 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று (ஜன.,08) ஒத்திகை நடைபெறுகிறது. ஒத்திகையை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நேரில் ஆய்வு செய்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா பரவ துவங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

குறுகிய காலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. அடுத்த சில நாட்களில், இந்த தடுப்பூசிகளை நம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதலில் சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 2ம் தேதி, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 மாவட்டங்களில் ஒத்திகை செய்யப்பட்டது. தற்போது, நாடு முழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சென்னை, மத்திய மருந்து கிடங்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த ஒத்திகையை ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார். பின், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது : சென்னையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை 3 இடங்களில் ஆய்வு செய்தேன். கொரோனா தடுப்பூசி பணிகள் திருப்தியையும் அளிக்கிறது என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE