வழிபாட்டில் இல்லாத கோவில், தொல்லியல் துறையின் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி - -திருமால்பூர் கிராமங்களுக்கு இடையே, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், ஒரு கற்கோவில் உள்ளது. கோவில் கருவறை முகமண்டப கபோதத்தில், ஒவ்வொரு மூலையில் கபோதக்கூடும், கொடிக்கருக்கும் சந்திரமண்டலமும் காணப்படுகின்றன. முகமண்டப நுழைவாயிலில், இடதுபுறம் முதல் பராந்தகரின் மதுரைகொண்ட கோப்பரகேசரி கல்வெட்டு உள்ளது.குறுஞ்சிற்பங்கள், பெரும்பாலும் திருமாலின் அவதாரங்களாகவே காட்டப்பட்டுள்ளன. அவற்றில், கண்ணனின் குடக்கூத்து, கோவர்த்தனகிரிதாரர், உரலில் கட்டிய கண்ணன், வெண்ணை திருடும் கண்ணன், ஆலிலைக்கண்ணன் முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதாக, சு.சீதாராமன் என்னும் வரலாறு ஆய்வாளர், தன் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தவிர, கோவில் முழுதும், பச்சை நிற கற்களால் கட்டப்பட்டிருப்பது, இதன் சிறப்பு தன்மையாக உள்ளது. சுவர் முழுதும், கட்டுமான கற்களில், வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவில் கருவறைக்குள் சுவாமி சிலைகளும் இல்லை. விலை உயர்ந்த ஆபரணங்களும் இல்லை. எனினும், இந்த கோவிலை, தொல்லியல் துறையினர் சுத்தம் செய்து, பாதுகாப்பு வேலி அமைத்து, காவலர் ஒருவரை நியமித்து பாதுகாத்து வருகின்றனர்.

இது குறித்து, சென்னை தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த கோவில், 9 - 10ம் நுாற்றாண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கோவில் எனக் கூறலாம். முதலாம் பராந்தகர் காலம் முதல், ராஜராஜர் காலம் வரை இருக்கும். இதை பராமரிக்க வழங்கிய நன்கொடை, தங்கம் விபரம் குறித்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதனால், தொல்லியல் துறை பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், இந்த கோவிலை, கோவிந்தபாடி பெருமாளடிகள், கோவிந்தபாடி ஆழ்வார் போன்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. கண்ணணின் சிற்பங்கள் இருப்பதால், 'கோனார் கோவில்' என, பேச்சு வழக்காக மாறி இருக்கலாம். இதை, பச்சை நிற கோவில் எனக் கூறுவது தவறு. இது, ஒருவிதமான கருங்கல் தான். வள்ளிமலை பகுதியில் இருந்து எடுத்து வந்து, கோவிலை கட்டி இருக்கலாம். - இவ்வாறு, அவர் கூறினார்.

அவிழ்க்கப்படாத முடிச்சு
கோனார் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலில், கண்ணனின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இங்கு, ஏழு குதிரை பூட்டிய தங்க தேர், மண்ணில் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என, யாருக்கும் தெரியாது. பலரும், பல விதமாக பேசுவதை தான் நானும் கூறுகிறேன்.
-ஏ.ரங்கநாதன்,
வேளியூர்,
காஞ்சிபுரம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE