கரூர்: மாவட்டத்தில் மொத்தம், 5,191 முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், இன்று ஐந்து இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஒத்திகை நடக்கிறது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டு, இந்திய நிறுவனமான பாரத் பையோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டிற்கு, மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில், தடுப்பூசியை பாதுகாப்பதற்கான ஏற்பாடு, முதற்கட்டமாக தடுப்பூசி பெறவுள்ள முன்கள பணியாளர்கள் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. இதன்படி கரூர் மாவட்டத்தில், 45 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுதாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட, 3,006 பேர் உள்ளனர். இதுபோல, தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளினிக், லேப், ஆயுர்வேத, சித்தா என, 407 அமைப்புகளில், 2,191 பேர் உள்ளனர். மாவட்டத்தில் முதற்கட்டமாக மொத்தம், 5,197 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் மலர்விழி கூறியதாவது: கரூர் அரசு மருத்துவமனை, கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையம், குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், கரூர் அப்போலோ மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை இன்று நடக்கிறது. இங்கு, காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை ஆகியவற்றில், வடிவமைப்பு போன்றவை குறித்து ஆராயப்படும். மேலும், 25 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து முன்னோட்டம் நடத்தப்படும். தடுப்பூசி போட்டு கொள்ள வருகை தரும் நபர்களை அமரவைத்து, அவர்களுக்கான குறுந்தகவல் ஆன்லைன் மூலமாக வந்ததை உறுதி செய்துகொண்டு, ஊசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான குளிர்சாதன கருவிகள், குளிர்பதன சேமிப்பு மையங்கள் போதுமான அளவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE