குளித்தலை: குளித்தலை, சப்- கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன், குளித்தலை டி.எஸ்.பி., சசிதர், தாசில்தார் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், தைப்பூசத் திருவிழாவில் சுவாமிகளை தலையில் சுமந்து வரும் பக்தர்கள், 200 பேர், மாட்டு வண்டியில் சுவாமி எடுத்து வரும், 50 பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம், அடையாள அட்டை வழங்கப்படும். தைப்பூசத் திருவிழாவில், தற்காலிக தரைக்கடைகள் தடை செய்யப்பட்டுள்ளன. சுவாமிகளை தூக்கும் பக்தர்கள், கோவில் பெயரில் பனியன் அணிந்து வர வேண்டும், ஜாதி பெயரில் பனியன்கள் அணிந்து, சுவாமிகள் தூக்க தடை விதிக்கப்படுகிறது. அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும் சுவாமிகளை தூக்க வேண்டும். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், சிப்பந்திகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மருத்துவ குழுவினரை பங்கேற்க செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எட்டு கோவில் செயல் அலுவலர்கள், நகராட்சி கமிஷனர், தீயணைப்பு துறையினர், மருத்துவர்கள், அர்ச்சகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE