சேலம்: போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய நிலையில், டிரைவர், கண்டக்டர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகம், எட்டு கோட்டம், 21 மண்டலங்கள் மூலம் இயக்கப்படும், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களின் பராமரிப்பு, இயக்கத்துக்கு, 1.43 லட்சம் தொழிலாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 92 ஆயிரத்து, 350 பேர் மட்டும் பணியில் உள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுதும், தொழிலாளர்கள், 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, காத்திருப்பு போராட்டம் தொடங்கி உள்ளனர். இதனால், அனைத்து பஸ்களையும் இயக்க, நிர்வாக இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், 'அனைத்து தொழிலாளர்களும் பணியில் இருக்க வேண்டும். மருத்துவ விடுப்பு தவிர, மற்ற விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீறி, பணிக்கு வராத டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அனைத்து கோட்ட நிர்வாக இயக்குனர்கள், கிளை மேலாளர்கள் மூலம் எச்சரித்துள்ளனர்.
அலுவலக ஊழியர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முக்கிய நகரங்கள், வெளி மாநிலங்களுக்கு, வரும், ஜன., 12 காலை முதல், சிறப்பு பஸ்களின் இயக்கம் தொடங்க உள்ளது. இதனால், அலுவலக ஊழியர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களும், ஜன., 12 முதல், ஜன., 20 வரை, தொடர்ந்து பணியில் இருக்கவும், விடுப்பு எடுக்க தடை விதித்தும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE