ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பொருட்களுடன், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு, அக்கட்சியினர் துண்டு பிரசுரம் வினியோகித்தது, தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம், 2,500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவை துணிப்பையில் வழங்கப்படுகின்றன. இப்பொருட்களை, அ.தி.மு.க.,வின் வார்டு, பகுதி, ஒன்றிய செயலர்கள், பிற பிரிவுகளில், பொறுப்பில் உள்ள, அ.தி.மு.க.,வினர் முன்னிலையில், ரேஷன் கடை ஊழியர்கள், மக்களுக்கு வழங்குகின்றனர். இதற்காக, அனைத்து ரேஷன் கடைகள் முன்புறம், அ.தி.மு.க., சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு பொருட்களுடன், அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அதில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னம் ஆகிய படங்களுடன், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. துண்டு பிரசுரங்களை, அ.தி.மு.க.,வின் மாவட்ட செயலர்கள் அச்சிட்டு, அனைத்து நிர்வாகிகள், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கி உள்ளனர். பொங்கல் பரிசு பொருட்களுடன், துண்டு பிரசுரங்களை, ரேஷன் கடை ஊழியர்களே வழங்கினர். இதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பல இடங்களில், அ.தி.மு.க.,வினர், பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுச்செல்லும் மக்களிடம், ரேஷன் கடை முன் நின்று, அந்த துண்டு பிரசுரத்தை வழங்கினர். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தி.மு.க.,சேலம் மாநகர் மாவட்ட செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கூறியதாவது: ஆட்சியில் இருப்பவர்கள், தங்கள் தவறு, ஊழலை மறைக்க, கொரோனா காலத்தில் வழங்க வேண்டிய நிதியை, பொங்கல் பரிசு பொருட்களாக வழங்குகின்றனர். மக்களின் வரிப்பணம் மக்களை சென்றடைவதில் தவறு இல்லை. அதேநேரம், உயர்நீதிமன்றம், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில், எந்த கட்சி சாயலும் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, துண்டு பிரசுரம் வழங்குகின்றனர். இதுகுறித்து, தலைமையின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில், சட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE