வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கப்படும் என பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். குறைந்தது இரண்டு வார காலம் அவரது சமூக வலைபக்கங்கள் முடக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியபோது, வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை நடந்தது. அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு கபளீகரம் செய்தனர். அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். அதனால், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டமும் நிறுத்தப்பட்டது. அதன்பின், இரவில் சபை மீண்டும் கூடி, ஓட்டெடுப்பு நடந்தது. அதில், ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.பாதுகாப்பு கருதி வாஷிங்டன் மாகாணத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக , 'அதிபர் தேர்தல் செல்லாது என்று, துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவிக்க வேண்டும். அதை, நம் ஆதரவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
போராட்டத்துக்குப் பின், அவர் வெளியிட்ட செய்தியில், 'நீங்கள் எல்லாரும் மிகுந்த மன வேதனையில் இருப்பீர்கள் என்பது தெரியும். மோசடி தேர்தல் நடந்துள்ளது; அவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது. இருப்பினும், அனைவரும் அமைதியுடன் வீடு திரும்புங்கள்' என, டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டிரம்ப் வெளியிட்ட பல செய்திகளை, 'டுவிட்டர், பேஸ்புக்' சமூக வலைதளங்கள் நீக்கின. மேலும், அவரது, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும், அந்த நிறுவனங்கள் முடக்கி வைத்தன.
டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பதிவிட்ட 3 டுவிட்கள் நீக்கப்பட வேண்டும். தவறினால், அவரது கணக்கு தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நடவடிக்கை
இந்நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கு உள்ள கணக்குகளை காலவரையின்றி முடக்க, பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: அதிபர் பதவிக்கு புதிதாக தேர்வான ஜோ பைடனிடம், அதிகாரத்தை அமைதியாக ஒப்படைக்காமல், அதனை தடுப்பதற்கான பணிகளை செய்ய, தனது எஞ்சிய பதவி காலத்தை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். கேப்பிடோல் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்காமல், மன்னிக்க, தனது பேஸ்புக் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்தியது, அமெரிக்கா மற்றும் உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் நேற்று அகற்றினோம். அவரது பதிவுகளும், நோக்கமும், மேலும் வன்முறையை தூண்டும் என நாங்கள் நம்புகிறோம். பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அடுத்து வரும் 13 நாட்கள் மற்றும் பதவியேற்பு விழா அமைதியாக நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக, எங்களது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, எங்கள் தளத்தை பயன்படுத்த அனுமதி அளித்திருந்தோம். சில நேரங்களில், எங்களது கொள்கைகளை மீறும் போது அவரது பதிவுகளை நீக்கி இருக்கிறோம். மீறப்படும் பதிவுகள் குறித்து குறியிட்டு காட்டியுள்ளோம். அரசியல் பேச்சு, சர்ச்சைக்குரிய பேச்சாக இருந்தாலும், அவற்றை அணுக பொது மக்களுக்கு உரிமை உண்டு என நம்புவதால், இதனை செய்தோம். ஆனால், தற்போதைய சூழல் அடிப்படையிலேயே மாறுபட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறை, கிளர்ச்சியை தூண்டுவதற்கு எங்கள் தளத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்த காலகட்டத்தில், அதிபரை தொடர்ந்து, எங்கள் சேவையை பயன்படுத்த அனுமதித்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதனால், அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் காவலவரையின்றி முடக்குகிறோம். அல்லது, அதிகாரம் மாற்றம் அமைதியாக நிறைவடையும் வரை குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது தடை தொடரும். இவ்வாறு ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்களுக்காக டிரம்ப் வெளியிட்ட வீடியோவையும் பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் நீக்கியுள்ளன. தேர்தல் முடிவுகளை சந்தேகம் தெரிவிக்கும் வகையிலும், தனது ஆதரவாளர்களை பாராட்டும் வகையில் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளையும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் நீக்கியுள்ளன.
வீடியோக்கள் நீக்கம்
இதனைத்தொடர்ந்து தற்போது கூகுளின் வீடியோ தளமான யூடியுப் டொனால்ட் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ சேனலில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சிலவற்றை நீக்கி உள்ளது. இன்னும் 90 நாட்களுக்கு அமெரிக்க தேர்தல் குறித்து வதந்திகளை பரப்பும் வீடியோக்களை யாராவது பதிவிட்டால் அவர்களது யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு யூடியூப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020 தேர்தலில் மோசடி நடந்ததாக, தவறான தகவலை பரப்பும் வகையில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
குறிப்பாக, பார்லிமென்ட் மீது நடந்த தாக்குதலின் போது, டிரம்ப் வெளியிட்ட வீடியோவை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம், அதில் டிரம்ப் தவறான தகவல்களை கூறுவதாக தெரிவித்துள்ளது. யூடியூப் தளத்தில் டிரம்ப்பை 26.8 லட்சம் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வரலாற்றில் நிகழாத இந்த பெரிய வன்முறை தாக்குதல் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கலவரத்தை தூண்டியவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE