புதுடில்லி: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 8-வது முறையாக தற்காலிக உறுப்பினராகியுள்ள இந்தியா, தாலிபான் மற்றும் லிபியா தடை குழு, பயங்கரவாத எதிர்ப்பு குழு ஆகியவற்றுக்கு தலைமை பொறுப்பு வகிக்க உள்ளது. இந்த தகவலை ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.
இந்தியா கடந்த திங்களன்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 8-வது முறையாக நிரந்தரமல்லாத உறுப்பினராக பொறுப்பேற்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புதல், வளரும் நாடுகளுக்காக பேசுவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் மனிதனை மையமாக கொண்ட தீர்வுகள் ஆகியவற்றை இலக்காக வைத்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது இந்தியா தலைமை வகிக்க உள்ள மூன்று கமிட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தாலிபான் தடை குழு இந்தியாவுக்கு முன்னுரிமை வாய்ந்த ஒன்று. இது 1988 தடைக்குழு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள், ஆப்கானிஸ்தான் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை கவனிக்க உதவும்.
லிபியா தடை குழுவும் ஐ.நா.,வின் முக்கியமான துணை அமைப்புகளில் ஒன்று. இது லிபியா மீதான இரு வழி ஆயுத வணிக தடை, சொத்து முடக்கம், பயணத் தடை, பெட்ரோலியத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துகிறது. லிபியா மற்றும் அதன் அமைதி நடவடிக்கைகள் மீது சர்வதேச கவனம் குவிந்துள்ள நிலையில் இந்தியா அக்குழுவுக்கு தலைமை தாங்குகிறது.

இறுதியாக பொருளாதார எதிர்ப்பு குழுவுக்கு 2022-ல் இந்தியா தலைமை வகிக்கும். அது இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது பவள விழா ஆண்டாகவும் அமைய இருப்பது தனிச்சிறப்பு. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2001-ல் இந்த குழு அமைக்கப்பட்டது. முன்னதாக 2011 மற்றும் 2012 காலக்கட்டத்தில் இக்குழுவிற்கு இந்தியா தலைமை வகித்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என ஐ.நா.,வுக்கான இந்திய நிரந்தர தூதர் திருமூர்த்தி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE