லக்னோ: உத்தர பிரதேச காங்கிரஸை அடிமட்ட அளவில் வலுப்படுத்த 'அமைப்பு உருவாக்கம்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர். 100 தலைவர்கள் மாவட்ட அளவில் இதற்காக முகாமிட்டுள்ளனர். பிரியங்கா மேற்பார்வையில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மிகப்பெரிய மாநிலமான அங்கு காங்கிரஸை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா இறங்கியுள்ளார். 'அமைப்பு உருவாக்கம்' என்ற பெயரிலான இத்திட்டம் மூலம் நகர்புற வார்டுகள் மற்றும் பஞ்சாயத்து அளவில் கட்சி கிளைகளை தொடங்கி வருகின்றனர். ஜன., 3-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் 25 வரை நடைபெற உள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் கட்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என கூறுகின்றனர்.
இத்திட்டம் பற்றி உத்தரபிரதேச காங்., தலைவர் அஜய் குமார் லல்லு கூறியதாவது: பிரியங்கா உத்தரவின் பேரில் இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் கிட்டத்தட்ட 60,000 கிராம கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். 8,000 வார்டுகளில் கிளை அமைத்து கூட்டங்கள் நடத்தி வருகிறோம். விரைவில் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் பிரியங்கா வருகை தந்து ஆய்வு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

இது தவிர ஐந்து அகில இந்திய பொதுச் செயலாளர்களும் இத்திட்டத்திற்காக உள்ளூர் தலைவர்களுடன் பணியாற்றுகின்றனர். மாநிலத்தின் 823 வட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் குழு அமைய இருப்பதாகவும், இதற்காக 28,000 கட்சியினர் அடிமட்ட அளவில் உறுதிசெய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் அனில் யாதவ் கூறியுள்ளார். நகரங்களில் வார்டு கிளைகளும் அமைக்க தொடங்கியுள்ளனர் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE