புது டில்லி: உருவமாறிய கொரோனா வைரஸ் பற்றி அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரிட்டனிலிருந்து இன்று (ஜன., 8) காலை 246 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டில்லி வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமை முகாமில் வைக்க கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

வேகமாக பரவக் கூடிய உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் தீவிரமடைந்து இருக்கிறது. இதனால் அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் டிசம்பரில் பிரிட்டனுக்கு பயணம் செய்ய தடை விதித்தன. இந்தியா மட்டும் கடந்த 6-ம் தேதி பிரிட்டனுக்கான விமானத் தடையை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீக்கியது. வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும். பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்ற சான்றினை பெற்றிருக்க வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் ஆகியவை கட்டுப்பாடுகளில் அடங்கும்.
இன்று காலை ஏர் இந்தியா விமானம் 246 பயணிகளுடன் டில்லிக்கு வந்து சேர்ந்தது. கொரோனா பாசிடிவ் இல்லாதவர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என விதிமுறை இருந்தது. இந்நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அனைவரையும் 7 நாட்கள் தனிமை முகாமிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பிரிட்டன் வைரஸ் டில்லி மக்களுக்கு பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். டில்லியில் ஏற்கனவே 82 பேரிடம் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் வகை கண்டறியப்பட்டிருக்கிறது.

பயண தடையை நீக்கியிருப்பதற்கும் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “மிகுந்த சிரமத்துடன் மக்கள் கொரோனா சூழலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனா நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பயணத் தடையை நீக்கி ஏன் எங்கள் மக்களை ஆபத்துக்குள்ளாக்குறீர்கள். நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 31 வரை தடையை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE