லாக்டவுன்' வந்தாலும் வந்தது, 'யுடியூப்' சேனல் துவங்குவோர் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில், ஏகமாக அதிகரித்துவிட்டது.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, தனக்கென தனி யுடியூப் சேனல் துவங்கி, லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தவர், சென்னையைச் சேர்ந்த சித்ரா.
'சித்ரா முரளி கிச்சன்' என்ற பெயரில், 2015ல் துவங்கப்பட்ட இவரது சேனலுக்கு, ஆறு லட்சத்திற்கும் மேலான பின் தொடர்வோர் உள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர், மகனின் படிப்பு, குடும்பத்தை கவனிப்பது உள்ளிட்ட காரணங்களால், பணியில் இருந்து விலகினார்.
வீட்டில் இருந்தபடியே ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை வீடியோ எடுத்து, யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தார். இன்று, இணைய உலகில் அவர் ஒரு, 'செலிபிரிட்டி!'
இயல்பான பேச்சு, அதிகம் மேக்கப் இல்லாத சாதாரண தோற்றம், எளிய சமையல் குறிப்புகள் போன்றவை தான், தன் பலம் என நம்புகிறார், சித்ரா. தற்போது, யுடியூபில் சமையல் குறிப்புகள் வழங்கும், முக்கிய, 'செலிபிரிட்டிக்கள்' பலருக்கும், சித்ரா தான் ரோல் மாடல்.
பெண்கள், வீட்டில் இருந்த படியே வருமானத்தோடு, புகழையும் சம்பாதிக்கலாம் என்பதை நிரூபித்துக்காட்டி இருக்கும் சித்ரா, கணவரின் ஒத்துழைப்பு இருந்தால், ஒவ்வொரு இல்லத்தரசியும், சாதனை நாயகியாகலாம் என்கிறார்.
சித்ரா கூறியதாவது:
பெண்கள் வேலைக்கு சென்று தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. குடும்பத்தை கவனித்தது போக வீட்டில் கிடைக்கும் குறைந்தபட்ச நேரத்தை, பயனுள்ள வகையில் செலவிட்டால், வருமானம் ஈட்டுவதோடு, நிச்சயம் மிகச் சிறந்த நிலையையும் அடையலாம். கைவினைப் பொருட்கள் தயாரித்தல், அழகுக் கலை, சமையல் குறிப்பு, குழந்தை பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட பலவற்றையும் வீடியோவாக பதிவிடலாம். பதிவு தரமானதாக இருந்தால், உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இதற்கு, இணையதள இணைப்புடன், ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.
இன்று எல்லா வாய்ப்புகளும் நம் முன் குவிந்து கிடக்கின்றன. அவற்றை சரியாக பயன்படுத்துவது அவரவர் திறமை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE