அலங்கார பொம்மையா?
'எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களின் கவர்னர்கள் தான், அரசுக்கு குடைச்சல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பர். இந்த அம்மா ஏன், பா.ஜ., அரசுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்...' என, உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேலை பற்றி குறை கூறுகின்றனர், அம்மாநில பா.ஜ., நிர்வாகிகள்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக இருக்கும் ஆனந்திபென் படேல், குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தவர்.சமீப காலமாக, ஆனந்தியின் நடவடிக்கைகள், உ.பி., மாநில, பா.ஜ.,வினரை எரிச்சல் படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
'மாநில அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன, முறைகேடு இல்லாமல் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றனவா' என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார். உ.பி., அமைச்சர்களோ, கவர்னரின் இந்த நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 'முதல்வர், அமைச்சர்கள் இருக்கும்போது, இவர், தனியாக ஓர் அரசாங்கத்தை நடத்துகிறாரா... எதற்கு இந்த தேவையில்லாத வேலை' என, புலம்புகின்றனர். ஆனந்தியோ, 'அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த வேலையையும் நான் செய்யவில்லை. கவர்னர் பதவி, அலங்கார பொம்மையல்ல. கவர்னர் என்றால், நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்க வேண்டுமா' என, சீறுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE