புதுடில்லி:சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை -- சேலம் இடையே சாலை போக்கு வரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழிச்சாலை அமைக்க, மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன.இதற்கு, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 50க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மேல்முறையீடு செய்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த டிசம்பரில் பிறப்பித்த உத்தரவு: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்டப்படி, மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளலாம்.இவ்வாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில், 'நிலம் கையகப்படுத்துவதில், பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் ஆவணத்தின்படி அளித்த தீர்ப்பில் தவறு இருக்கிறது. 'இந்தத் தவறு ஒட்டுமொத்த நீதி பரிபாலனத்தையும், தீர்ப்பையும் தவறாக்கிவிடும்அதனால், இந்த திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்த அளிக்கப்பட்ட உத்தரவை, மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE