உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உருவாகியுள்ள நிலையில், பிரிட்டனிலிருந்து, 257 பயணியர், டில்லி வந்திறங்கியுள்ளனர். பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் இடையே, வாரத்திற்கு, 30 விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், அதிக வீரியம் உடைய, உருமாறிய கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை, மத்திய அரசு, 23ம் தேதியிலிருந்து ரத்து செய்தது. இந்நிலையில், பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை மீண்டும் துவங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனாலும், திட்டமிட்டபடி, விமான போக்குவரத்து துவங்கியது. பிரிட்டனிலிருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், 257 பேர் வந்தனர். விமான நிலையத்தில், அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான செலவு தொகையாக, 3,400 ரூபாய், அவர்களிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.
பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது குறித்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:வாரத்துக்கு, 30 விமானங்களை பிரிட்டனுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் தரப்பில், 15 விமானங்களும், பிரிட்டன் தரப்பில், 15 விமானங்களும் இயக்கப்படும். வரும், 23 வரை, இதே நிலை நீடிக்கும். அதன்பின், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஏழு நாள் தனிமை
டில்லி மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பிரிட்டனில் இருந்து டில்லிக்கு விமானத்தில் வருவோர் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில், உருமாறிய வீரியம் மிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், பிரத்யேக பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர்.
பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்தாலும், அவர்கள், ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன் பின், வீட்டில், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE