புதுடில்லி:கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கும் முன், அனைத்து மாநில முதல்வர்களுடன், வரும், 11ல், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு பல்கலை, பாரத் பயோடக் நிறுவனம் ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு, அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும், 13 முதல், நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது.
முதற்கட்டமாக, சுகாதார வல்லுனர்கள், முன்களப் பணியாளர்கள், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், துப்புறவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். வரும், ஜூலைக்குள், 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆலோசனை
தடுப்பூசி வினியோகம், நிர்வாகம், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிஉள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி போடும் பணி துவங்குவதற்கு முன், வரும், 11ல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, உலகிலேயே மிகப் பெரிய அளவில் செயல்படுத்த உள்ள, கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வது குறித்து, அவர் கலந்துரையாடுவார் என, தகவல் வெளியாகிஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE