ஓரிரு மாதங்களில் நடக்க உள்ள, சட்டசபை தேர்தலில், மீண்டும் வெற்றி பெறுவதற்கான, புதிய வியூகத்தை, ஆளும் அ.தி.மு.க., தலைமை, இன்று வகுத்துள்ளது. ஓராண்டுக்கு பின், அக்கட்சியின் உயர்மட்ட அமைப்பான, பொதுக்குழு, சென்னையில் இன்று கூடியது. இன்றைய தீர்மானத்தில் ஏக, போக வாரிசு அரசியலை ஒழிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பபொறுப்பாளர்களுடன், உள்கட்சி மோதல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்பின், ஆளும் கூட்டணியில், எந்தெந்த கட்சிகள் தொடரும்; எவை கழற்றிவிடப்படும் என்பது தெரியவரும். தமிழகத்தில், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று, ஆட்சியை அ.தி.மு.க., தக்கவைத்துள்ளது. மூன்றாவது முறையாக வெற்றி பெற, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அக்கட்சி களத்தில் இறங்கி உள்ளது. ஜெயலலிதா இல்லாத சூழலில், அக்கட்சியால் வெற்றி பெற முடியுமா; ஆட்சி அதிகாரத்தை தொடர முடியுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
திட்டம்
இதற்கு விடை காணும் விதமாக, பொதுக்குழுவை கூட்டி, புதிய தேர்தல் வியூகத்தை வகுக்க, ஆளும் தலைமை திட்டமிட்டுள்ளது. சென்னை, வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது.
இதற்கு முன், 2019 நவம்பரில், பொதுக்குழு கூடியது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டில் பொதுக்குழு கூட்டப்படவில்லை.
தீயசக்திகள் தலைதூக்குவதா ?
இன்றைய கூட்டத்தில் ; முதல்வர் பழனிசாமியின் நிர்வாக திறமைக்கும், மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்து கொள்ள முடியாமல், பக்குவமோ, பண்பாடோ இன்றி விமர்சிக்கும் திமுக தலைவர் மற்றும் அக்கட்சியினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க பழனிசாமி , பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தீயசக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏக போக வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்கள்
தற்போது கூடும் பொதுக்குழுவில், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என, சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதி என, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.
அதனால், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து உள்ளனர்.
இன்று மாலை, 5:00 மணிக்கு, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில், கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. கட்சியின் அதிகார மையங்களாக விளங்கும் அமைச்சர்களே, பெரும்பாலும் மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர்.
ஆலோசனைகள்
இதுவரை, முதல்வர் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். துணை முதல்வர் உள்ளிட்டோர், பிரசாரத்திற்கு செல்லவில்லை. இது, பல சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே, இதுதொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில், முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. அதன்பின், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்டோரின், பிரசார திட்டம் முடிவாகலாம்.
நிபந்தனைகள்
அதைத் தொடர்ந்து, கூட்டணி விவகாரம் பற்றி பேசப்பட உள்ளது. ஆளும் கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் புதிய நீதி கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுடன் உறவை தொடர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அக்கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.அதிக தொகுதிகள்; ஆட்சியில் பங்கு என, சில கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகள் ஏற்கக் கூடியதாக இல்லை என்பதால், அக்கட்சிகளை கழற்றி விடலாமா என்றும், அதனால் ஏற்படும் பாதிப்பை சரிக்கட்ட, வேறு எந்த கட்சிகளை இழுக்கலாம் என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும், 14ம் தேதி, சென்னை வர உள்ளார். அப்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து பேசி, கூட்டணியை இறுதி செய்வார் என்றும், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை ஏற்று அறிவிப்பார் என்றும், ஆளும் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. -- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE