சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் பணிக்கு, கூடுதலாக எவ்வளவு பணியாளர்கள் தேவை என்ற விபரத்தை தெரிவிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.வரும், 20ம் தேதி, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இப்பணிகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று முன்தினம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.அப்போது, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின், சாஹு கூறியதாவது:இறுதி வாக்காளர் பட்டியல், எவ்வித தவறும் இல்லாமல், தயாரிக்கப்பட வேண்டும்.கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து தொகுதிகளிலும், கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.எனவே, கூடுதலாக எவ்வளவு பணியாளர்கள் தேவை; உங்கள் மாவட்டங்களில் போதிய ஊழியர்கள் உள்ளனரா அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்க வேண்டுமா என்ற விபரங்களை, உடனடியாக கணக்கிட்டு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, சாஹு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE