திருத்தணி: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டுவதற்கு, மண் பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள், 600க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருத்தணி தாலுகா, அருங்குளம் ஊராட்சியில், அருங்குளம் கண்டிகை அருகே, அரசுக்கு சொந்தமான, 17 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த இடத்தில், சென்னை கூவம் ஆறு, நீர் நிலைகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு, தமிழ்நாடு குடிசை வாரியம் தீர்மானித்து, அதற்கான பணியில் இறங்கியுள்ளது.அங்கு, 1,500 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், நேற்று, மண் பரிசோதனை செய்ய வந்தனர்.தகவல் அறிந்ததும், அருங்குளம், அருங்குளம் கண்டிகை மற்றும் கே.ஏ.கண்டிகை ஆகிய மூன்று கிராம மக்கள், 600க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் இங்கு வீடுகள் கட்டக்கூடாது என, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, மக்கள், எங்கள் மூன்று கிராம மக்கள் தங்களது கால்நடைகளை இந்த நிலத்தில் தான் மேய்த்து வருகிறோம்.இங்கு வீடுகள் கட்டினால் கால்நடைகளை வளர்க்க முடியாது என, கூறினர். இதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை சமரசம் செய்து அனுப்பினர். இதனால், இரண்டு மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE