ஊத்துக்கோட்டை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அருகில், நீரியல், நீர்நிலையியல் ஆய்வுக் கழகத்திற்கு தண்ணீர் செல்லும் மதகு உடைந்ததால், அப்பகுதி வெள்ளக் காடானது.திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் உள்ளது, சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். தற்போது, மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால் நீர் நிறைந்து, கடல்போல் காட்சியளிக்கிறது.இந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில், நீரியல், நீர்நிலையியல் ஆய்வு கழகம் உள்ளது. இங்கு நீர்த்தேக்கம் அமைக்க, திட்டப் பணிகள் சோதனை முறையில் செய்து வருகின்றனர்.இந்த மையத்திற்கு சோதனை செய்ய தேவையான நீர், நீர்த்தேக்கத்தில் இருந்து மதகு மூலம் பெறப்படுகிறது. இந்த மதகு முறையான பராமரிப்பின்மையால், பழுதடைந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், இந்த மதகு வழியாக அதிகளவு நீர் வந்ததால், மதகு திடீரென உடைந்தது. அங்கிருந்து, தண்ணீர் செல்லும் குழாயும் உடைந்ததால், தண்ணீர் பெருமளவு வெளியேறி அலுவலகம் முழுதும் சூழ்ந்து வெள்ளக் காடானது.சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஊழியர்களுடன் தண்ணீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அதிகளவு மணல் மூட்டைகள் போட்டு அடைப்பை சீர்படுத்தினர். அலுவலகத்திற்குள் புகுந்த நீரால், அங்கிருந்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் மூழ்கின. மேலும், அலுவலகத்தை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE