குரோம்பேட்டை: 'பல்லாவரம் நகராட்சி நிர்வாகம், மக்களின் குறைகளுக்கு செவிசாய்ப்பதில்லை' என, நலச்சங்க இணைப்பு மையத்தினர் குற்றஞ்சாட்டினர்.பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து, குடியிருப்போர் நலச்சங்கங்களின் இணைப்பு மையத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், நேற்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.அப்போது, அவர்கள் கூறியதாவது:பல்லாவரம் நகராட்சி பகுதிகளில், சமீபகாலமாக, எந்த ஒரு அடிப்படை பணியும் முறையாக நடப்பதில்லை. இதற்கு முன் இருந்த கமிஷனர்கள், பொதுமக்கள், நலச்சங்கத்தினர் தெரிவிக்கும் புகார்களை கேட்டு, அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர்.தற்போதுள்ள அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. ஒவ்வொரு நலச்சங்கத்தினரும், அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.குறிப்பாக, பொதுமக்கள் பங்களிப்புடன், 15 லட்சம் ரூபாய் செலவில், இணைப்பு மையம் மூலம் துார் வாரப்பட்ட நெமிலிச்சேரி ஏரி, நகராட்சியின் அலட்சியத்தால், கழிவு நீர் கலந்து நாசமாகி விட்டது.பிரச்னைகளை சரிசெய்ய, அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து, நலச்சங்கங்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.அதேபோல், முறையாக குப்பை அகற்றாமல், அதற்கு வரி மட்டும் வசூலிப்பது, எந்த விதத்தில் நியாயம். அஸ்தினாபுரம் பேருந்து நிலைய இடத்தை கையகப்படுத்தி, மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE