சென்னை: பொங்கல் புத்தக கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள, 'பிமேக் எக்ஸ்போ ஹாலில்' நேற்று மாலை துவங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி, இந்தாண்டு இதுவரை முடிவாகவில்லை. இந்நிலையில், புத்தகப் பிரியர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், நேற்று, பொங்கல் புத்தகக் கண்காட்சி துவங்கியுள்ளது. இதை, தமிழக தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன் திறந்து வைத்தார். திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன், விற்பனையை துவங்கி வைத்தார். பதிப்பாளர், சேது சொக்கலிங்கம் விழாவுக்கு தலைமை வகித்தார்.சென்னை வாசகர் வட்டம் சார்பில் நடக்கும் இந்த கண்காட்சி, வரும், 18ம் தேதி வரை நடக்கிறது.
இதில், தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை புத்தக விற்பனை நடைபெறும்.இங்குள்ள, 60 அரங்குகளில், 40 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. வாசகர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. அதேநேரம், அனைவரும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE