சென்னை:'அரசியல் கட்சிகளை குறிக்கும் வகையில், பொங்கல் பரிசு பொருளுடன், வேறு எந்த பொருளோ, துண்டு பிரசுரமோ, ரேஷன் கடை வளாகங்களில் வழங்க கூடாது; அரசியல் விளம்பரங்கள், ரேஷன் கடைகளில் இருக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப் பட்டது. இதில், ஆளும் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், கட்சி சின்னம் இடம் பெற்று இருப்பதாக, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடுத்தார்.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய, முதல் அமர்வு, 'பொங்கல் பரிசு டோக்கனில், அரசியல் கட்சி தலைவர்களின் படம், கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது' என, அறிவுறுத்தியது.
அரசியல் ஆதாயம்
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி மீண்டும் தாக்கல் செய்த மனுவில், 'ரேஷன் கடை வளாகம், அரசு கட்டடங்களில், அ.தி.மு.க.,வினரால் வைக்கப்பட்டுள்ள, பேனர், கட் அவுட், வளைவுகளை அகற்ற வேண்டும். 'ரேஷன் கடைகளுக்குள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், துண்டு பிரசுரங்களை அகற்ற வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில்,விசாரணைக்கு வந்தது.தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''ரேஷன் கடைகளுக்கு அருகில், ஆளும் கட்சியினர், பேனர் வைத்துள்ளனர். துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்படுகின்றன. அரசு திட்டங்களில், ஆளும் கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்.''அனுமதி இன்றி, பேனர் வைக்க மாட்டோம் என, நீதிமன்றத்தில் ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியினர், பேனர் வைத்துள்ளனர்,'' என்றார்.
புகைப்படங்கள்
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ''பொங்கல் பரிசு திட்டத்துக்கு உரிமை கோரி, எதிர்க்கட்சி சார்பிலும், பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. ''இது, தேர்தல் ஆண்டு என்பதால், கட்சிகள் உரிமை கோருகின்றன. பொங்கல் பரிசு வழங்கப்படும் பையில், முதல்வர் மற்றும் மறைந்த முதல்வரின் புகைப்படங்கள் இடம்பெற, தடை விதிக்கக் கூடாது,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொங்கல் பரிசு பொருட்களுடன், துண்டு பிரசுரம் வினியோகிக்கவோ, ரேஷன் கடை மற்றும் வளாகத்தில் காட்சிப்படுத்தவோ கூடாது என்பதை, அரசு ஏற்றுக் கொண்டுஉள்ளது. பொருட்கள் வழங்கும் பையில், முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வரின் படம் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய கட்டத்தில், பையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இருக்கலாம்
மற்றபடி, அரசியல் கட்சிகளை குறிக்கும் வகையில், பரிசு பொருட்களுடன், வேறு எந்த பொருட்களையும், துண்டுப் பிரசுரங்களையும், ரேஷன் கடை வளாகங்களில் வழங்கக் கூடாது. அரசியல் விளம்பரங்களும் இருக்கக் கூடாது.உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றி, பொது இடங்களில், கட் அவுட், வளைவு, பேனர் வைக்கக் கூடாது. அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தால், அவற்றை விரைந்து அகற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் அனைத்துக்கும், இந்த உத்தரவு பொருந்தும். ஒரே மாதிரியாக, இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE