'சாக்பீஸ்' எனப்படும் சுண்ணக் கட்டியில், கல்லுாரி மாணவர் கோகுல் என்பவர் உருவாக்கிய, 16 கால் கோவில் மண்டபம், காஞ்சிபுரம் அருங் காட்சியகத்தில் பார்வை யாளர்களை கவர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஓட்டல் வளாகத்தில், அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.இங்கு, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, சாக்பீஸ்களில் சிற்பங்கள் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இங்கு பயிற்சி பெற்ற, காஞ்சிபுரம் பக்தவத்சலம் தொழில் நுட்ப கல்லுாரியில், இறுதியாண்டு பயிலும் மாணவர் கோகுல், சாக்பீஸ் துண்டுகளில், 1 அடி அகலமும், 1 அடி உயரமும் உடைய, 16 கால் கோவில் மண்டபம் உருவாக்கியுள்ளார்.மண்டபத்தின் மையப்பகுதியில் மூலவர் சிவலிங்கமும், லிங்கத்தின் மேல்பகுதியில் இருந்து தண்ணீர் சொட்டுவது போன்ற அமைப்பும், லிங்கத்திற்கு எதிரே நந்தி வாகனமும் உள்ளது. மண்டபத்தின் வெளிப்புற நான்கு மூலைகளிலும், அலங்காரத்துடன் கூடிய தொங்கும் சங்கிலிகள் அமைக்கப்பட்டுஉள்ளன. இது, அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
மாணவர் கோகுல் கூறியதாவது:காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய மாதிரி அமைப்பு கலைஞர் அசோகன் அளித்த பயிற்சியும், என் தாய் அளித்த ஊக்கத்தால், 16 கால் கோவில் மண்டபம் செய்ய முயற்சி செய்தேன். மொத்தம், 560 சாக்பீஸ் மூலம், மூன்று மாதங்களில் செய்து முடித்தேன். இரு முறை செய்யும்போது, கோவில் மண்டபத்தின் மேற்கூரை பகுதி உடைந்து விட்டது. மூன்றாவதாக விடா முயற்சியுடன் முடித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE