சென்னை:கேரளாவில் இருந்து, கோழிகள் விற்பனைக்கு எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு, 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
நடவடிக்கை
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், துறை செயலர் கோபால் ஆகியோர் அறிவுரையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.கேரள மாநில எல்லையோரம் அமைந்துள்ள, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும், தமிழக எல்லைக்குள் நுழையாதபடி, தடை செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.
தமிழகத்தில் நுழையும், மற்ற வாகனங்கள், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, நோய் வராமலிருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி பண்ணைகளை தீவிரமாக கண்காணிப்பதுடன், கோழிகள், குஞ்சுகள் விற்பனைக்கு வராமல் கண்காணிக்கப்படுகிறது.எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், 1,061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுஉள்ளன.
மேலும், 24 மணி நேரம் செயல்படக்கூடிய, கட்டுப்பாட்டு அறை, கோவை கால்நடை பன்முக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, 0422 -- 2397614, 94450 32504 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கேரளா தவிர்த்து, பிற மாநிலங்களில் இருந்து, கோழிக்குஞ்சுகள், முட்டைகள், தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால், உரிய அனுமதி பெற வேண்டும்.
அச்சம் வேண்டாம்
கோழிகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். நன்கு சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதால், பறவை காய்ச்சல் நோய், மனிதர்களுக்கு வராது.இப்பறவை காய்ச்சல், மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இந்நோய் குறித்து, பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவைஇல்லை.இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE