சென்னை: அழகுக்கலையில், 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர், வசுந்தரா.முறையான பயிற்சிக்கு பின், இத்துறையில் கால் பதித்து, இன்று பலருக்கும் முன்னோடியாய் விளங்கும் இவர், மேனிப் பராமரிப்பின் போது, இன்றைய இளம் தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து கூறியதாவது: 'பியூட்டி பார்லர்' என்றாலே ஆடம்பரம் என்ற எண்ணம் மாறிவிட்டது. தலை முடி துவங்கி, சருமம், கண் இமைகள், -உதடு,- ரோமங்கள் என, அனைத்தையும் சுத்தமாகவும், அழகாகவும் பராபரிப்பதன் முக்கியத்துவம் குறித்து, இன்றைய இளம் தலைமுறையினர் நன்கு அறிந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, அழகுக்கலை மற்றும் அழகு நிலையங்கள் பெண்களுக்கானது என்ற எண்ணம் இருந்தது.'யுனிசெக்ஸ்' சலுான்கள் மற்றும் ஆண் அழகுக் கலை நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தற்போது அந்த எண்ணம் மாறிவிட்டது; இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. எல்லா துறைகளிலும் அதன் வளர்ச்சிக்கு பின், சில ஆபத்துகளும் இருப்பது போல், இந்தத் துறையிலும் உள்ளது. நிபுணத்துவம் இல்லாதவர்களின் பரிந்துரையே அதற்கு காரணம்.இணையதள வசதி, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பால், அழகுக்கலை குறித்த டிப்ஸ்களும் அதிகரித்துள்ளன. கேட்டவை, படித்தவை எல்லாம், 'டிப்ஸ்' என்ற பெயரில், பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது. எப்படி டாக்டர்களின் பரிந்துரையின்றி, மருந்துகளை உட்கொள்ளக் கூடாதோ அது போலத்தான், நிபுணத்துவம் இல்லாதவர்களின், டிப்ஸ்களை நம்பி, நம் மேனியை பாழ்படுத்திவிடக்கூடாது. எனவே, இணையத்தில் பரிந்துரைக்கும் போது, மிக எளிமையான பொருட்களை மட்டுமே எங்களை போன்ற நிபுணர்கள் பரிந்துரைப்பர்.நிபுணத்துவம் இல்லாதோர், இந்த அடிப்படை தெரியாமல் எல்லாவற்றையும் பரிந்துரைக்கின்றனர். இந்த விஷயத்தில், மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இணையத்தில் வெளியாகும் எல்லா விதமான பரிந்துரைகளையும் கண்மூடித்தனமாக செய்யாமல், நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், துறை சார் வல்லுனர்களின் பரிந்துரையை மட்டும் செயல்படுத்தினால், பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு.
முடிந்தவரை, தங்களுக்கு தெரிந்த, பயிற்சி பெற்ற அழகுக்கலை வல்லுனரிடம் கருத்து கேட்டு, அவர் ஒப்புதல் தந்த பின் எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார். மகளும் நானும்!என் மகள், மோனிஷா, இளங்கலையை இதழியல் முடித்துவிட்டு, முதுகலையில் பன்னாட்டு உறவுகள் படித்தார். இவை இரண்டிலும் தான் அவருக்கு ஆர்வம் அதிகம். கொரோனா ஊரடங்கு காலத்தில், எல்லா துறைகளைப் போல, அழகுக்கலை துறையும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ளப் பழகினால், எதையும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையையும் இந்த ஊரடங்கு தான் கற்றுக் கொடுத்தது. அந்த நேரத்தில், என் மகள் தான், தொழில்நுட்ப ரீதியாக எனக்கு நிறைய உதவி செய்தார். இப்போது வாழ்க்கையில மட்டுமின்றி, துறை ரீதியாகவும் மகளும், நானும் சேர்ந்து பயணிக்கிறோம். எங்கள் இருவரையும் இவ்வளவு நெருக்கமாக்கியது, லாக்டவுன் காலம் தான். அதற்காக கொரோனாவுக்கு என் நன்றி.-- எனக்கூறி புன்முறுவலுடன் சிரிக்கிறார், வசுந்தரா!அமில, கார தன்மையில் கவனம் தேவை!பொதுவாக, அமிலத்தன்மை, காரத்தன்மை அதிகம் இருக்கும் பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து. எல்லா வகை பொருட்களும், அனைத்து தரப்பினருக்கும் சேராது. பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
இன்று இணையத்தில் அதிகமாக பரிந்துரைக்கப்படும் எலுமிச்சை, மருதாணி, ஜாதிக்காய், பூண்டு போன்றவையெல்லாம், அதிக அமலத்தன்மை கொண்டவை. தொடர்ந்து அவற்றை பயன்படுத்தினால், தோல் எரிச்சல் உருவாகிவிடும். தேவைப்படும் தோல்களுக்கு, தேவைப்படும் அளவே பயன்படுத்த வேண்டும். அதை நிபுணர்களால் மட்டுமே கண்டறிய முடியும். காரத்தன்மை அதிகம் கொண்ட பொருட்களால் தயாரிக்கப்படும், ஷாம்புகள், ஒவ்வாமையை ஏற்படுத்தி, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். ஒவ்வொருவரின் சருமம் மற்றும் முடியின் தன்மைக்கேற்ப, அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் தன்மையும் மாறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE