'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' நடத்திய கச்சேரியில், 'அக்கரை சகோதரிகள்' என்றழைக்கப்படும், சுபலக் ஷ்மி, சொர்ணலதா இணைந்து பாடிய பாடல்கள், கேட்போரின் செவியில் தேனைப் பாய்ச்சின. 'வருக வருகவே' என்ற வர்ணத்தை பாடி தங்கள் கச்சேரியை துவங்கினர்.
அதை இயற்றியவர், அக்கரை சகோதரிகளின் பாட்டனார் என்பது கூடுதல் சிறப்பு.அடுத்து பாடிய தியாகராஜர் கிருதிக்கு வந்த ஆலாபனை நீளவில்லை. பாடலுக்கு, நெரவலும், கற்பனை ஸ்வரமும் கூட இல்லை. ஆம்... தியாகராஜர் தத்துவம் குறித்த அடிப்படையான கேள்விகளை கேட்டிருக்கும் இந்தப் பாடலில், இவை இரண்டிற்கும் தேவை தான் என்ன இருக்கிறது.'மாமகபரா' என்ற கிருஷ்ணலீலா தரங்கிணிப் பாடலே, இவர்கள் மெயினுக்கு முன் பாடியது. இதன் முதல் வரியின் பொருள், 'நான் செய்திருப்பது எண்ணற்ற பிழைகள்; அவற்றைப் பொறுத்து அருள்வாய்' என்பதாகும். இதை அங்கு நடந்த நெரவல், ஸ்வரக் கோர்வைகள் மூலம் பலமுறை பாடும் வாய்ப்பை ஏற்படுத்தி, முறையிட்டது சரி தான். ஆனால், இந்தப் பாடல் முடியும் சமயத்தில், ராகபேதப்படுத்தி, பூர்ணஸட்ஜத்தையும், பஹுதாரியையும் புகுத்தி, ஒரு ராகத் திருவிளையாடல் நடத்தியது எந்த விதத்தில் சரி. மேலும், தோடி ராகத்தில், அந்தப் பாடல், -இவற்றின் தனிமகத்துவமும் மேன்மையும் பாதிக்கப்படுமல்லவா. இது போன்ற முயற்சிகளுக்குத்தான், ராகம், தானம், பல்லவி காத்துக் கொண்டிருக்கிறதே. மெயினான, 'சுபபந்துவராளி' ராகத்திற்கு விஸ்தாரமான ஆலாபனை. இந்துஸ்தானி பிடிகள், ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் என்றில்லை; கணிசமான அளவில் இருந்தன.
இசை ரசிகர்கள், ஆறாவதாக வந்த பாடலை, தன்னிகரில்லாத, வித்வான் வோலேடி வெங்கடேஸ்வரலு, 'ரேவதி' ராகத்தில் பாடிக் கேட்டிருப்பார்கள். அக்கரை சகோதரிகள் இதில் சற்று மாற்றம் ஏற்படுத்தி, 'ஜோக்' ராகத்தில் பாடினர். இந்த மெட்டை அமைத்தவர்கள், ஹைதராபாத் சகோதரிகளான, திருமதிகள் லலிதாவும், ஹரிப்ரியாவும் என்பதையும் அறிவித்தனர். இந்தப் பாடலுக்கு முன், குலசேகர ஆழ்வாரின் முகுந்த மாலையிலிருந்து, 'நமாமி நாராயண' என்ற ஒரு சுலோகம், சஹானா ராகத்தில் ஆரம்பித்தது. அடுத்து வந்தது ஹம்சாநந்தி. இது அழகாகச் சென்று தஞ்சம் புகுந்தது, 'ஜோக்' ராகத்திற்குள்.அக்கரை சகோதரிகளைப் போலவே, வயலினில், ரீதிகவுளை ராகத்திற்கு மேல் ஸட்ஜமத்திற்குச் சட்டென்றுச் சென்று வாசித்தாலும், கணேஷ் பிரசாத், தோடி, சுபபந்துவராளி ராக ஆலாபனைகளில், தன் சொந்தக் கற்பனையையும் வாசித்தது சிறப்பு. சுபபந்துவராளியில் கர்நாடக இசையின் பக்கத்திலிருந்தே ராகத்தின் முழு தரிசனத்தையும் பெற்றார்.மிருதங்கத்தில் ஜெயச்சந்திர ராவும், கஞ்சிராவில் குருப்பிரசன்னாவும் நன்றாகவே இணைவுடன் இருந்து, பாடல்களுக்கேற்றபடி வாசித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE