ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திட்ட பாதுகாப்பு ஒத்திகையை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம், எமனேஸ்வரம்நகர் நல மையங்கள், ராமேஸ்வரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள், உச்சிப்புளி, பார்த்திபனுார், கீழத்துாவல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராமநாதபுரத்தில் 2 தனியார் மருத்துவமனை உட்பட பத்து இடங்களில் நடத்தப்பட்டது.
தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல், அங்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கண்டறியும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. முதற்கட்டமாக டாக்டர்கள், அனைத்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கும், அடுத்ததாக முன்கள பணியாளர்களாக செயல்படும் காவலர்கள், துாய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோர், நீண்ட கால நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், நான்காம் கட்டமாக மக்களுக்கு வழங்கப்படும், என்றார்.
மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை சூப்பிரண்டு ஜவஹர், டாக்டர்கள் மலையரசு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE