திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:பஞ்சு விலை உயர்வால், தமிழகத்தில் நுால் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்துக்கு மட்டும், ஆண்டுக்கு ஒரு கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது. ஆனால், மொத்தம் 6 லட்சம் பேல் மட்டுமே, தமிழகத்தில் உற்பத்தியாகிறது; 90 சதவீத பஞ்சு, வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.கடந்த அக்டோபரில், கேண்டி (356 கிலோ) 34 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு கொள்முதல் விலை, 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், பின்னலாடை உற்பத்திக்கு பிரதான மூலப்பொருளான ஒசைரி நுால் விலை, மூன்று மாதங்களில், கிலோவுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது.உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும், போட்டி அதிகரித்துள்ளது. நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், புதிய ஆர்டர்களை பெறமுடியாமலும்; ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு, ஆடை தயாரிக்க முடியாமலும் தவிக்கின்றன.பருத்தி, நுால் விலை உயர்வு, திருப்பூர் உட்பட இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை, கைநழுவச் செய்துவிடும்; வங்கதேசம், வியட்நாம் போன்ற பருத்தி உற்பத்தி இல்லாத நாடுகள், வாய்ப்புகளை பயன்படுத்துக்கொள்ளும்.ஆடை உற்பத்தி துறை, சங்கிலித் தொடர் போன்றது. தொழில் வளர்ச்சிக்கு, அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியமாகிறது. திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த சங்கங்கள்; நுாற்பாலை சங்க பிரதிநிதிகள் இணைந்து, குழு அமைக்கவேண்டும்.இந்த குழு மூலம், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, ஆண்டு முழுவதும், சீரான விலையில், தட்டுப்பாடு இன்றி, மூலப்பொருள் கிடைக்கச் செய்யவேண்டும். பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த, அனைவரும் இணைந்து அரசிடம் முறையிட வேண்டும்.இதுகுறித்து, அனைத்து ஆடை உற்பத்தி, நுாற்பாலை சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE