பொங்கலுார்:இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட(பி.ஏ.பி.,) தொகுப்பு அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது.தற்போது இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் மண்டல பாசனத்திற்காக, வரும் 11ல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல வசதியாக பிரதான கால்வாய் முதல் கிளை கால்வாய் வரை பராமரிப்பு பணிகள் பெரும்பகுதி முடிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு பரவலாக மழை பெய்துள்ளதால் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பி.ஏ.பி., தண்ணீரும் வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. எனவே, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.குப்பைத்தொட்டியா வாய்க்கால்!விவசாயிகள் கூறுகையில், ''சமீபகாலமாக வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள், இறந்த கோழிகள், காலி மது பாட்டில்கள் போன்றவற்றை கொட்டி நாசப்படுத்தி வருகின்றனர். இதனால், வாய்க்காலை துார் வாருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கண்ணாடி துண்டுகள் பலரது கால்களை பதம் பார்த்து விடுகின்றன. நாள்தோறும் வாய்க்காலில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மதகுகளில் அடைத்துக் கொள்வதால் விவசாய நிலத்திற்குள் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. ஒவ்வொரு மதகையும் இரவு பகலாக கண்காணிக்க வேண்டியுள்ளது. இது கூடுதல் வேலைப் பளுவை ஏற்படுத்துவதால் விவசாயப் பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. வாய்க்காலை குப்பைத் தொட்டியாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE