'இங்க மனுசங்க உயிரோட இருக்கணும்னா... இந்த பறவைகளும், இங்க உயிரோட இருக்கணும்...', என, 'எந்திரன் 2.0' திரைப்படத்தில் வரும், 'புள்ளினங்கள்' பாடல் வரிகளைப்போல, இயற்கை மரணிக்காமல் இருக்க, பறவைகளின் பங்கு அளப்பரியது.மரங்களை பரப்பி இயற்கையை காத்து, பூச்சிகளை அழித்து விவசாயிகளை பாதுகாத்து, சூழல் பாதுகாவலனாக வலம் வருகின்றன பறவைகள். உலகம் முழுவதிலும், எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. அதில், இந்தியாவில், 1,300க்கும் மேற்பட்ட பறவைகளும், தமிழகத்தில், 578க்கும் மேற்பட்ட பறவைகளும் இனம் காணப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைமலை சுற்றுப்பகுதியில், ஆறு, குளத்தை ஒட்டி வாழும் எண்ணற்ற நீர் வாழ், சதுப்பு நில பறவைகள், சமவெளிப்பறவைகள், வனத்தினுள் வாழும் பறவைகள் என, இடத்துக்கு தகுந்தாற் போல் பலவிதமாக உள்ளன.2016 - 17 ஆண்டுகளில், கடும் வறட்சிக்குப்பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, இயற்கையின் கருணையால் கொட்டித்தீர்க்கிறது மழை. இதனால், விவசாயம் செழித்து, ஓடை, சிற்றோடை, ஆறு, குளம் என, காணும் நீராதாரங்களில் எல்லாம் தண்ணீர் ததும்புகிறது. மழையால், தரிசு நிலமாக இருந்த விளைநிலங்களில் கூட நெல், மானாவாரி பயிர்கள், பந்தல் காய்கறிகள் என பயிர்கள் சாகுபடி நடக்கிறது, காணுமிடமெல்லாம் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. இதனால், பறவைகளை 'குஷி'ப்படுத்தும் வகையில், ஈசல், தட்டான்பூச்சி, சிலந்தி, பலவகை புழுக்கள் என, பறவைகளின் உணவுகளான சிற்றுயிர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், திரும்பிய திசையெல்லாம், காலை, மாலை நேரங்களில், 'கீச்... கீச்' என பறவைகளின் சப்தத்தை கேட்க முடிகிறது; பலவகை பறவைகளை காண முடிகிறது.விளைநிலங்களில் பூச்சிகளையும், பயிர்களின் கதிர்களை சாப்பிட அரசவால் ஈபிடிப்பான், கருப்பு வெள்ளை வாலாட்டி, கருச்சான் குருவி, தேன்சிட்டு, கொண்டலாத்தி, செம்மீசைச் சின்னான், பச்சைப் பஞ்சுருட்டான், உள்பட பலவகை பறவைகள் வருகின்றன.சதுப்பு நிலப்பறவைகளான வெள்ளை அரிவாள் மூக்கன், தாமிர இறக்கை இலைக்கோழி, வெண் கொக்கு, உண்ணிக்கொக்கு, வெண்கழுத்து நாரை, சிறிய சீழ்க்கைச்சிரவி (சிறு சிறகி); சின்ன, பெரிய, கொண்டை நீர்க்காகங்கள் என பலவகை பறவைகளை காண முடிகிறது.அதேபோல், தோட்டத்திலிருக்கும் எலி, பல்லியை சாப்பிட வெண்கொண்டை மீன்கொத்தி வருகிறது. பழங்களை கொத்தி சாப்பிட வால் காக்கை, எண்ணற்ற பைங்கிளிகள், பழவகை மரப்பயிர்கள் சாகுபடி செய்த விளைநிலங்களில் உலாவுகின்றன. அழிந்துவரும் பல அரியவகை பறவைகளையும் பார்க்க முடிகிறது. வறட்சியில் பிடியில் சிக்கி வாழ்விழந்து, அருகி வந்த பறவைகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இத்தனை எண்ணிக்கையில், பலவகை பறவைகளை காண்பது, ஆனைமலையில் இயற்கைச்சூழல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்துகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE