மருமகளே... உன்ற ஊட்டுக்காரர் எங்க கண்ணு... அவரு ஒரு வேலையா மடத்துக்குளம் போயிருக்காரு அத்தை. சரி இப்புடி வா... பாரம்பரியமான கைக்குத்தல் அரிசி தயாரிக்கறத பத்தி சொல்றேன். சொல்லுங்க அத்தை!பல வருசத்துக்கு முந்தி, மடத்துக்குளம் அமராவதி ஆத்தங்கரை ஓரத்தில் இருக்குற வயக்காட்டுக்கு வேலைக்கு போனா, நெல்லு தா கூலியா தருவாங்க. அத தலைல சுமந்துகிட்டு பல மைல் நடந்து ஊட்டுக்கு வருவேன். ஏனுங்க அத்தை கஷ்டமா இருக்காதா?அத பாத்தா என்ற மகன எப்படி வளக்கறது கண்ணு... அந்த நெல்லை மூட்டையா கட்டி வெச்சுக்குவேன். அரிசி தேவைப்படும்போது, ஒரு மூட்ட நெல்ல எடுத்து, பெரிய பாத்திரத்தில் கொட்டி, தண்ணீ ஊத்தி ராத்திரி முழுவதும் ஊற வைப்பேன்.அதிகாலைல அந்த நெல்ல அண்டாவுல கொட்டி, வெறகு அடுப்பில் வைத்து, நல்லா வேக வைக்கோணும். பக்குவமா வெந்த பின்னால, நெல்ல தரைல கொட்டி, சூடு தணிஞ்சப்புறம் அத மூட்டையா கட்டி, ஒரு கி.மீ தொலைவுல இருக்குற கோவில் வாசல்ல, கொட்டி உலர வைப்பேன்.ஏனுங்க அத்த இங்கயே காய வைக்கலாமே. மருமகளே... அப்போ நம்ம வீடல்லாம் மண்ணு வாசல்தா கண்ணு. கோவில்ல தா சிமென்ட் தரை இருக்கும். நல்ல உலர்ந்த பிற்பாடு, மறுபடியும் மூட்டை கட்டிட்டு தலைல சுமந்து வந்து, ஊட்டுக்குள்ள கொட்டிருவேன். கழுத்தெல்லாம் வலிக்கும்.மூனு நாளைக்கு பின், அரிசியை தனியாக பிரித்தெடுக்குற பக்குவத்துக்கு வந்து விடும். மறுபடியும் மூட்டையா கட்டி, கழுத்து வலியோட சுமந்துகிட்டு ஊர் தலவாசல்ல இருக்குற, பொது உரலுக்கு போவேன். அத்தே அது என்னங்க பொது உரலு?மருமகளே! உரல் வாங்க வசதி இல்லாதவங்க பயன்படுத்த, ஊர் பொது காசுல வாங்குனது கண்ணு. அந்த உரல்ல கொட்டி உலக்கையால குத்தோணும். இப்படி ஒரு மூட்ட நெல்லு குத்த, பல மணி நேரம் ஆகும். அதுக்கப்புறம் அத முறத்துல கொட்டி, துாத்தோணும். அப்ப தான் அரிசியை தனியா எடுக்க முடியும்.கையெல்லாம் ஓஞ்சு போயிடுங்கண்ணு... அத மறுபடியும் மூட்டையா கட்டி தலையில் சுமந்து வருவேன். இப்படி கொண்டாந்த அரிசியை சோறாக்குவேன். என் மகன் அதை உண்ணும் சந்தோஷத்த பார்க்குறப்போ, என்பாரம் எல்லாம் போய்விடும் கண்ணு.இது மட்டும் இல்ல, ஒவ்வொரு நாளும் பல கஷ்டங்களை சுமந்து தான், என் மகனை வளர்த்தே கண்ணு. கடைசி காலத்துல எனக்கு சோறு போடுவான்னு நினைச்சேன். ஆனா நீ தனிக்குடித்தனம் போகணும்னு நேத்து கொல்லப்புறத்தல பேசிட்டு இருந்தத கேட்டேன்.இப்ப கூட வேற வீடு பார்க்கச் சொல்லி எ மகன, மடத்துக்குளம் அனுப்பி இருக்கேனு எனக்கு தெரியுங் கண்ணு. பரவால்ல என்ற மவன, நீ நல்லா பாத்துக்க கண்ணு. அத்தை, என்ன மன்னிச்சிடுங்க.அரிசி தயாரிச்சு ஒரு வேள சாப்பிடறுதுக்கு கூட, எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்கனு புரிஞ்சுக்கிட்டேனுங்க. வயசான காலத்துல உங்கள தவிக்க விட்டு, தனிக்குடித்தனம் போக நெனச்சது தப்புத்தானுங்க. நீங்க எப்பவும் எங்க கூடவே இருப்பீங்க அத்த... கைக்குத்தல் அரிசி என் கண்ண திறந்திடுச்சு...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE