மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, அரசுத்துறையினர் கூட்டு கள ஆய்வு செய்தனர்.மடத்துக்குளம் பகுதியிலுள்ள குருவக்களம், ருத்ராபாளையம் கிராமங்களில், ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடந்துள்ளது. குறைந்த நாளில் அறுவடை செய்யக்கூடிய, ஏ.டி.டி.37 ஏ., எஸ்.டி 16., ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு, தை மாதம் அறுவடை செய்யும் அளவில் பயிர்கள் வளர்ந்திருந்தன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால், அப்பகுதியில், பலநுாறு ஏக்கர் பரப்பிலான நெற்பயிர் மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, 'தினமலர் நாளிதழில்' நேற்றுமுன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர், பாதிப்பு ஏற்பட்ட வயல்களை கூட்டு கள ஆய்வு செய்தனர்.மடத்துக்குளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறுகையில், ''வயல்களுக்கிடையில் போதிய வடிகால் வசதி இருந்த போதிலும், மழையால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பயிர் சேத விபரங்களை கணக்கீடு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE